அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
விளக்கம்:-
அன்பு ஆர்வம் என்ற கன்றை ஈனும். அந்தக் கன்றும் நட்பு என்ற கன்றைப் போடும். இதைப்போலவே அன்பு நமக்குள் இருந்தால் மற்றவர்களை மேல் ஆர்வம் பிறக்கும். அந்த ஆர்வத்தினால் நட்பு பிறக்கும்.
அன்பு ஆர்வமுடைமை ஈனும் – ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச்செய்த அன்பு, அத்தன்மையாற் பிறர்மாட்டும் விருப்பமுடையைத் தரும்.
ஒருவர் மீது நாம் அன்பு செலுத்த ஆரம்பித்தால் அவர் சார்ந்த மற்றவர்கள் மீதும் நமக்கு ஆர்வம் வந்துவிடும்.
பள்ளியில் படிக்கும் இரு மாணவர்கள் அன்புடன் பழகுகின்றனர். அவர்களுக்குள் அன்பு உருவாகிறது. தானாகவே அவர்களின் குடும்பத்தினரோடும் நெருங்கிப் பழகி அன்பு காட்ட ஆரம்பித்து விடுவார்கள். பின்னர் இரு குடும்பங்களும் அன்பு பாராட்ட ஆரம்பித்து பெரிய நட்பாக மாறிவிடும். பெண் தோழிகள் என்றால் அவர்களையே தனது அண்ணனுக்குத் திருமணம் செய்து வைக்கும் அளவுக்கு நட்பு விரிவதை நான் கண்டிருக்கிறேன். இப்படி நட்பு விரிவதற்கு அன்பு காரணமாகிறது.
அது நண்பு என்னும் நாடாச்சிறப்பு ஈனும் – அவ்விருப்பமுடைமைதான் இவற்குப் பகையும் நொதுமனுமில்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவிறந்த சிறப்பினைத் தரும்.
தமிழர்களின் வாழ்வியல் முறைப்படி உறவுகள் மூன்று வகைப்படும்.
- நட்பு
- பகை (உறவின் விகாரம்)
- நொதுமல் (பார்வையளவில் உறவினன். தொடர்பில்லாதவர்)
நாம் ஒருவர் மீது அன்பு காட்டினால் அவரைச் சார்ந்தவர்கள் மீது ஆர்வம் வரும். இப்படி ஆர்வம் காட்டத் துவங்கிவிட்டாலே போதும். நட்பு என்ற ஒரே உறவு மட்டுமே இருக்கும். பகையும், நொதுமலும் இருக்காது. இதைத்தான் நாடாச்சிறப்பு – அளவிறந்த சிறப்பு என்கிறார் வள்ளுவர்.
நமது தேவைகளை நிறைவேற்றுவது பெரும்பாலும் நட்புதான். நல்ல நண்பர்கள் நமக்கு அமைந்துவிட்டால் நமது வாழ்வில் உள்ள குறைகள் கூட நீங்கிவிடும். நிறைய உதவிகள் நல்ல நண்பர்களாலே கிடைக்கும். அதுவே அளவிறந்த சிறப்பாகும்.
The article was well written. Thank you for publishing this article