அதிகாரம் – 8 – குறள்- 75

இலக்கியம்

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.

விளக்கம்:-

ஒரு நல்ல பயனை அடைய வேண்டுமானால் அதற்குக் கடின உழைப்பு தேவை. அதுபோலவே நல்ல பயனைப் பெற்றுக்கொள்ளக் கடின உழைப்பு இல்லாத விடயங்களும் உண்டு. இதைத்தான் இக்குறள் கூறுகிறது.

இந்த உலகத்திலும் மனைவி, பிள்ளைகள், உறவுகள், நட்புகள் என்று இன்பமாக வாழ்ந்து அதன் பயனாக அடுத்தப் பிறவியிலும் சொர்க்கத்திற்குப் போகலாம். இதற்கு அன்பு முதன்மைத் தேவையாயிருக்கிறது. அன்பைப் பெருக்கிக் கொண்டால் போதும்.

அன்பு உற்று அமர்ந்து வழக்கு என்ப – அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்.

வழக்கு – நெறியின் பயன்

அன்புடையவராக இருந்து வாழுகிற வாழ்க்கையின் பயன் என்று எதைச் சொல்வார்களென்றால்?

வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு – இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின்பத்தினை.

இல்லறத்தை அன்போடு நடத்தினால் இவ்வுலகிலும் ஆனந்தமாக வாழ்ந்து சொர்க்கத்திலும் ஆனந்தமாக வாழலாம்.

வழக்கு – நெறியின் பயன் – இது ஆகுபெயர்.

இல்லற வாழ்வில் மனைவி, பிள்ளைகளோடு அனுதினமும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி அவர்களின் நிறை குறைகளை அறிந்து விசாரித்து ஒருவரிலொருவர் அன்பு செலுத்த வேண்டும். இது தற்காலத்தில் அநேக குடும்பங்களில் குறைந்து கொண்டு வருகிறது. தொலைக்காட்சிப் பெட்டியும், அலைபேசியும் மனிதர்களைத் தனிமைப்படுத்தி வருவது நாம் அறிந்ததே.

வாரமொரு முறை (ஒக்கல்) உறவுகளோடு ஒன்றாகக் கூடி அளவளாவி இன்ப துன்பங்களைப் பகிர்ந்து அதனால் வரும் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும்.

மாதமொரு முறை நட்பு வட்டத்தில் அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களில் அன்பு கூற வேண்டும். இதனால் பிரச்சனை வரும் என்பதை விடவும் நன்மைகளே அதிகம் கிடைக்கும். “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்று அவ்வைப் பாட்டியும் கூறுகிறார்.

பரிமேலழகர் இல்வாழ்க்கையை வேள்வி என்கிறார். இல்வாழ்க்கை என்னும் வேள்வியை நாம் செய்தால் தேவர்களும் இன்புறுவர். இந்த வேள்வியின் பயன் சொர்க்கம்.

இரண்டு வழிகளில் சொர்க்கத்தை அடையலாம் என்று நமது தமிழ் மரபு கூறுகிறது.

  1. இல்லற வாழ்வை அறவழியில் நடத்தினால் சொர்க்கத்தை அடையலாம்.
  2. துறவறத்தை மேற்கொண்டுப் படிப்படியாகச் சென்று இறுதிப்படியை அடைந்து வீடுபேற்றை அடைந்து மோட்சத்திற்குச் செல்லலாம்.

இதன்படி, இல்லறவாழ்வில் எல்லா இன்பங்களையும் அனுபவித்தவர்களும் எந்தக் கஷ்டத்தையும் படாமல் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர். எல்லாவற்றையும் துறந்து (விரதம் முதலியவற்றால் தன்னை வருத்திக்கொள்வது துறவறம்) துறவை நோக்கி முயல்பவர்களும் நான், எனது, என்ற அகங்கார மமகாரத்தை விடுகிற இறுதிப்படியை அடைவதறுக்கு முன்பதாகவே ஊழின்படி மரிப்பவர்களும் சொர்க்கத்திற்கேச் செல்கின்றனர்.

ஆகவே சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமானால் இல்லறத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அதுவே எளிதும் கூட.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *