என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
விளக்கம்:-
எலும்பு (முதுகெலும்பு) இல்லாத புழுவை வெயில் சுடுவது போல அன்பில்லாதவனை அறம் சுடும். முதுகெலும்பு இல்லாத புழுவால் வேகமாக ஓடமுடியாது. புழு மென்மையான உடலமைப்பைக் கொண்டது. ஆகவே வெயில் சுட்டு விடும் இதையே உவமையாகச் சொல்லுகிறார்.
என்பு இலதனை வெயில் போலக்காயும் – என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற் போலக் காயும், அன்பு இலதனை அறம் – அன்பில்லாத உயிரை அறக்கடவுள்.
என்பு (எலும்பு) உடல் உறுப்புகளுள் ஒன்று. அன்பு என்பது உயிர் உறுப்புகளுள் ஒன்று.
வெயில்:-
வெயிலுக்கு இரு தன்மைகள் உண்டு.
- ஒளி
- சூடு
உலகத்திற்கு வெளிச்சத்தை கொடுப்பது வெயில்தான். உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் வெயில் அவசியம். வெயில் சூடு தரும் என்றாலும் அந்தச்சூட்டைத் தருவது வெயிலின் நோக்கமல்ல. வெளிச்சத்தைத் தருவது மட்டுமே வெயிலின் நோக்கமாகும். ஆனால் அதற்குள் சூடு மறைந்திருக்கிறது.
காயும் – வருத்தும்.
இக்குறளின் படி புழுவைச் சுடுவதும் வெயிலின் வேலையல்ல. புழுவின் இருப்பிடம் சேறும் சகதியுமான இருளான பகுதிதான். ஆனால், வெயிலைக் கண்டவுடன் புழு தானாகவேச் சென்றுச் சூடுபட்டுச் செத்துப்போகிறது. ஆகவே வெயில் புழுவை சுடவில்லை. புழு தனது இடத்திலிருந்து வெளியே வந்து வெயிலிடம் அகப்பட்டுச் சாகிறது.
தீமையை இயல்பாகக் கொண்டவர்களுக்கு இருள் களம். நன்மையை இயல்பாகக் கொண்டவர்களுக்கு வெளிச்சம் களம்.
அன்பில்லாதவர்களைச் சுடுவது அல்ல அறத்தின் நோக்கம். அன்பில்லாதவர்கள் அறத்தோடு வலியச்சென்று மோதும்போது சாகின்றனர். எனவே அறம் யாரையும் சுடுவதில்லை. அன்பில்லாதவர்கள் தானே வலியச்சென்று அறத்திடம் சூடு வாங்கிக்கொள்வார்கள்.
இவ்வாறு தானாக தேடிக் கொள்கிற அழிவை வெயிலின் மீதும் அறத்தின் மீதும் ஏற்றிக் கூறுகிறார் வள்ளுவர். ஏனென்றால் வெயிலுக்கும் சூடு இயல்புதான். அறத்திற்கும் சூடு இயல்புதான்.