அதிகாரம் – 8 – குறள் – 79

இலக்கியம்

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப் பன்பி லவர்க்கு.

விளக்கம்:-

யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு – யாக்கையகத்தின்கண் நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு, புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் – ஏனைப்புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்?

புறத்துறுப்பெல்லாம் என்ன செய்யும் என்பதே பொருளாகும். என்ன என்பதற்கு எவன் என்பது பொருள். இது அக்காலத்தியப் பிரயோகம்.

நாம் கற்கின்ற அதிகாரம் இல்லறவியல். எனவே புறத்துறுப்பு என்பது உடலில் உள்ள ஐம்புலன்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி இவைகளைக் குறிக்கவில்லை.

இக்குறளில் சொல்லப்பட்டப் புறத்துறுப்பு என்பது இல்லறத்தினுடைய புறத்துறுப்பாகிய இடம், பொருள, ஏவல் ஆகியவற்றையேக் குறிக்கிறது என்று பரிமேலழகர் விளக்குகிறார்.

இல்லறம் நடத்துவதற்கு வீடு, பொருள், ஏவலாட்கள் போன்ற அனைத்தும் தேவை. இவைகள் இருந்தால் இல்லறம் சிறப்பாக இருக்கும். ஆகவே புறத்துறுப்பாகிய இவைகள் அனைத்தும் மிகச்சிறப்பாக இருந்தாலும் அகத்திலே (உள்ளத்திலே) அன்பு இல்லையென்றால் இல்லறம் சிறக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *