விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற் றன்று.
விளக்கம்:-
சாவா மருந்து எனினும் – உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும், விருந்து புறத்ததாத் தான் உண்டல் – தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல், வேண்டற்பாற்று அன்று – விரும்புதல் முறைமையுடைத்து அன்று.
கடந்த குறளிலே வாழ்க்கையினுடைய அவசியம் விருந்து தான் என்று கூறினார். இக்குறளிலே விருந்தினரை எப்படி பேண வேண்டும் என்று கூறுகிறார்.
விருந்தினரை நம்மில் ஒருவராக நினைக்க வேண்டும். விருந்தினர் வந்திருக்கும்போது நமது வீட்டிலே எத்தனை உயர்வான சிறப்பான உணவு வகைகள் இருந்தாலும் அதனை ஒளித்துவைக்காமல் கொடுப்பது உயர்வான பண்பாகும்.
விருந்தினரோடு சேர்ந்து அமர்ந்து உணவருந்துவது மிகவும் நல்ல பண்பாகும். அது விருந்தினரை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும்.
விருந்தினராக ஒருவர் வீட்டிற்குச் செல்லும்போது அந்த வீட்டில் நிச்சயம் குழந்தைகள், பெரியவர்கள் இருப்பார்கள். எனவே நம்மால் இயன்ற தின்பண்டங்கள் வாங்கிச்சென்றுக் கொடுப்பது அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும்.
அமிழ்த்தை உண்கிறவன் சாகமாட்டான் என்று நம்பப்படுகிறது. இது இல்பொருள். காலந்தோறும் உவமையாகச் சொல்லப்பட்டு வருவதாகும். இதுவரைக்கும் யாரும் கண்ணால் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட அமிழ்தம் நமக்குக் கிடைத்தால் கூட அதையும் விருந்தினருக்குப் பகிர்ந்து கொடுக்கவேண்டும். உண்மையில் கொடுப்பதில்தான் ஆனந்தம் கிடைக்கும். உள்ளம் மகிழ்ச்சியால் பூரிக்கும்.
இப்படியெல்லாம் விருந்தினரை உபசரிக்கும்போது விருந்தினருக்கும் நம்மீது மரியாதை கலந்த அன்பு செலுத்தத் தொடங்குவார். அன்பின் பிணைப்பு விருந்தின் மூலம் உண்டாகிறது.
சாவா மருந்து – சாகாமைக்குக் காரணமான மருந்து.
இவை இரண்டு குறள்களும் விருந்தோம்பலின் சிறப்புக்களைக் கூறுகின்றன.