செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
விளக்கம்:-
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் – தன் கண் சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக்கடவ விருந்தைப் பார்த்துத் தான் அதனோடு உண்ண இருப்பான், வானத்தவர்க்கு நல்விருந்து – மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல்விருந்து ஆம்.
இல்லறத்தான் ஒருவர் தனது வீட்டுக்கு வந்த விருந்தினரைப் பேணி உபசரித்து அனுப்பிவைத்த பின்பும் இன்னும் எந்த விருந்தினராவது வரமாட்டாரா? வந்தால் அவரோடு சேர்ந்து உணவருந்தலாமே என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பாராம்.
இப்படிப் பூலோகத்திலே விருந்தினரைப் பேணும் ஒருவர் மறுமையிலே தேவலோகம் செல்லும்போது தேவர்கள் நமக்கு இப்படி ஒரு விருந்து கிடைத்ததே என்றுப் போற்றி வரவேற்பார்களாம்.
வருவிருந்து – இடவழுவமைதி.
இக்குறளிலே இடம் பற்றியக் குற்றம் இருக்கிறது. விருந்து என்பது படர்க்கைச் சொல். படர்க்கைக்கு வரு என்றுப் போடக்கூடாது.
வழுவமைதியைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
- குறிப்பிட்ட ஒரு காலத்திலே ஒரு வசனம் தொடங்கப்பட்டால் அந்தக் குறிப்பிட்டக் காலத்திலே முடிக்க வேண்டும்.
- ஒருமையிலே தொடங்கினால் ஒருமையிலே முடிக்க வேண்டும்.
- பன்மையிலே தொடங்கினால் பன்மையிலே முடிக்க வேண்டும்.
இதுவே சரியான வசன நடையாகும். திருவள்ளுவர், திருமூலர் போன்ற பெரும்புலவர்கள் எழுதிய பாடல்களிலே இலக்கணப் பிழைகள் வந்தால் உரையாசிரியர்கள் இடவழுவமைதி என்றே எழுதுவர்.
தன்மை, முன்னிலைக்குத்தான் வரு என்றச் சொல்லைப் போட வேண்டும். படர்க்கைக்குப் போடக்கூடாது. விருந்து என்பது படர்க்கைப்பெயர். எனவே இங்கே வரு என்பது இலக்கணக் குற்றம். இதை நாம் கண்டுகொள்ளக் கூடாது. ஏனென்றால், குறளின் ஆசிரியர் வள்ளுவர் பொருள் ஞானம் நிறைந்தவர். எனவே மொழி ஞானத்தில் தவறு விட்டால் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்.
நல்விருந்து – எய்தா விருந்து (கிடைப்பதற்கு அரிய விருந்து)
உதாரணம்:-
எங்களது இல்லத்திற்கு சாலமன் பாப்பையா அவர்கள் வந்து உணவருந்தி விட்டுச் சென்றார்.
இப்படித்தான் தேவர்களும் மேற்சொன்ன இல்லறத்தானை நல்விருந்து கிடைத்ததே என்று போற்றி வரவேற்பார்களாம்.
இக்குறளிலே விருந்து செய்வதின் மூலம் கிடைக்கும் மறுமைப்பயன் பற்றிக் கூறப்பட்டது.