அன்புடைமை

இலக்கியம்

பரிமேலழகரின் அதிகார முன்னுரை

அஃதாவது, அவ்வாழ்க்கைத்துணையும் புதல்வரும் முதலிய தொடர்புடையார்கட் காதலுடையனாதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். இல்லறம், இனிது நடத்தலும், பிறவுயிர்கண்மேல் அருள் பிறத்தலும், அன்பின் பயனாகலின், இது வேண்டப்பட்டது. வாழ்க்கைத் துணை மேல் அன்பில் வழி இல்லற மினிது நடவாமை.

“அறவோர்க் களித்தலு மந்ததண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலுந்த தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலு மிழந்த வென்னை” சிலப்பதிகாரம் – கொலைக்களக்காதை வரிகள் – 71 -73 என்பதனானும் அதனாலருள் பிறத்தல்” அருளென்னு மன்பீன் குழவி” திருக்குறள் பொருள் செயல்வகை 757 என்பதனானும் அறிக.

தொடர்புடையார் மேல் வருவது அன்பு. தொடர்பு இல்லாதவர் மேல் வருவது அருள். அன்பு வளர்ந்தால் அருள் வந்துவிடும். அன்பினால் மட்டுமே இல்லறம் இனிதே நடக்கும். பின்புதான் அருள் நோக்கி நகர முடியும். இவ்விரு பயனையும் அன்பு தருகிறது.

சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டுகிறார். கோவலனும், கண்ணகியும் மதுரைக்கு வந்து ஒரு வீட்டிலே தங்கியிருக்கின்றனர். அங்கே கணவன் கோவலனுக்கு சமையல் செய்து கொடுக்கும்போது கண்ணகி பின்வருமாறு கூறுகிறாள்.

அறவோர்க்களித்தல் – அறநெறியாளர்களுக்கு அளித்தல்

அந்தணர் ஓம்பல் – அந்தணர்களைப் பாதுகாத்தல்

துறவோர்க் கெதிர்தல் – துறவிகளைப் பேணுதல்

இந்த மூன்றும் இல்லறம் நடத்துவோர் கடமையாகும். இந்தக் கடமைகளைச் செய்யும் பாக்கியத்தை நான் இழந்தேன்.

அதிகாரம் – 8 – குறள் – 71

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புண்கணீர் பூசல் தரும்.

விளக்கம்:-

பொருட்கள் இருவகைப்படும்.

  1. கருத்துப்பொருள்
  2. காட்சிப்பொருள்

காட்சிப்பொருளை நாம் பார்க்கலாம். கருத்துப்பொருள்கள் எல்லாமே திருக்குறளில் இருக்கின்றன. அன்பு என்பது கருத்துப் பொருள். காட்சிப்பொருளல்ல. ஆகவே அன்புடைமைக்குள்ளே அன்பின் கூறுகள் (தாய்மை உட்பட) எங்கெங்கு இருக்கின்றனவே அதெல்லாம் அடங்கும். அன்பை கண்களால் பார்க்க முடியாது. எனவே, அன்பாகிய கருத்துப்பொருளை அனுமானத்தால் மட்டுமே அறிய முடியும்.

நமது உறவினர்கள் மீதோ அல்லது மற்றவர்கள் மீதோ நமக்கு உண்மையாகவே பற்று இருக்குமானால் அவர்களுடைய துன்பம் கண்டு நமது கண்களிலே கண்ணீர் வர வேண்டும். இந்த இடத்தில் தான் அன்புக் காட்சிக்கு வராமல் கண்ணீர் காட்சிக்கு வருகிறது. இந்தக் கண்ணீர் தான் அவர்கள் மீது நாம் கொண்ட அன்பை வெளிக்காட்டுகிறது. ஆகவே அன்பு அனுமானப்பிரமாணத்தால் காணப்பட வேண்டிய ஒன்று.

உதாரணமாக, உடன்பிறந்தத் தம்பி அல்லது தங்கையருக்குத் திருமணம் நடக்கத் தாமதமாகிறதென்றால் அவர்களுடன் பிறந்த மூத்த சகோதரி நிச்சயம் கண்ணீர் வடிப்பதுண்டு. தூக்கம் வராமல் தவிப்பதுமுண்டு. இவர்கள் தனது உடன்பிறந்தோரை அவ்வளவாய் நேசிக்கிறார் என்பதற்கு அந்தக் கண்ணீரே அடையாளம். இப்படியாக அன்பை இக்குறளிலே அடையாளப்படுத்துகிறார்.

அன்பிற்கும் உண்டோ – ம் என்ற உம்மை உயர்வைச் சொல்ல வந்தது. அன்பின் உயர்வைச் சொல்ல வந்ததால் இது உயர்வுச்சிறப்பும்மை.

(புண்கணீர்) புண்மை – துன்பம். இந்தச் சொல் ஆர்வலருக்கு உரியது. கண்ணீருக்கு உரியதல்ல. ஆனால், ஆர்வலரது துன்பம் கண்ணீரின் மேல் ஏற்றப்பட்டுச் சொல்லப்பட்டுள்ளது. இதையே புண்கணீர் என்று கூறுகிறார்.

அன்பு காட்டப்படவும் வேண்டும். வெளிப்படுத்தப்படவும் வேண்டும். ஆனாலும் உணரப்படுவதே அன்பு என்று கூறுகிறார்.

இக்குறளின் மூலம் அன்பினது உண்மை கூறப்பட்டது.

1 thought on “அன்புடைமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *