முன்னுரை;-
பாயிரவியல் முடிந்து அறத்துப்பால் தொடங்குகிறது. அறம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு விடையளிக்கிறார் திருவள்ளுவர்.
தனிமனித வாழ்க்கை நான்கு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.
- பிரம்மச்சரியம் – கற்கும் பருவம்
- கிருகஸ்தம் (இல்லறம்) – வாழும் பருவம்
- வானப்பிரஸ்தம் – ஓயும் பருவம்
- முற்றாக விலகும் பருவம் – துறவறம் (சன்னியாசம்)
இந்த நான்கு பகுதிகளுக்கும் அறம் சொல்வதை தமிழ் மூதாதையர்கள் மரபாக வைத்திருந்தனர். படிப்பு வாழ்க்கையின் ஆயத்த நிலை. எனவே திருவள்ளுவர் பிரம்மச்சரியத்தை நேரிடையாகக் கூறாமல் இல்லறத்திற்குள்ளே அடக்குகிறார். (அவசர உலகத்திலே மக்கள் எதிர்காலத்தில் அவசரப்படுவார்கள் என்று அவர் நினைத்திருக்கலாம்) பிரம்மச்சரியம் இல்லறத்தின் ஆயத்தநிலை.
வானப்பிரஸ்தம் என்பது ஒரு குடும்பத்திற்குள்ளே இரு பெற்றோர் வந்துவிட்டால் (தாத்தா – பாட்டி அப்பா – அம்மா – பேரப்பிள்ளைகள்) தாத்தா – பாட்டி தங்கள் பொறுப்பிலிருந்து விடுபட்டு ஓய்ந்துவிடுவது. வானப்பிரஸ்தம் துறவறத்திற்கு ஆயத்த நிலை.
எனவேதான் திருவள்ளுவர் இல்லறம் துறவறம் ஆகிய இரண்டை மட்டுமே கூறுகிறார்.
அறத்தின் கூறுகள்;-
- இல்லறம்
- துறவறம்
இதில் எது பெரியது? உயர்ந்ததைத் தான் முதலாவது கூறவேண்டும். இதுவே வரிசைக்கிரமம். துறவறமே உயர்ந்தது. முற்றும் துறந்த துறவிகளைப் பற்றி நீத்தார் பெருமையில் கூறிவிட்டார். இரண்டாவது இல்லறம். அறத்துப்பாலிலே துறவறவியல் என்று ஒரு அதிகாரம் வைக்கிறார். இதிலே துறவு நோக்கி முயற்சிக்கிறவர்களைப் பற்றிக் கூறுகிறார். முயல்வார் என்று அவர்களைக் கூறுகிறார்.
துறவு நோக்கிச் செல்வதை விடவும் இல்லறம் சிறந்தது. இல்லறத்திலே பயிற்சி இல்லாதவர் துறவு நோக்கிச் செல்ல இயலாது. இல்லறத்திலே முதிர்ச்சி வந்தால் தான் துறவறம் வரும். ஒரு மனிதன் இல்லறத்திலே அன்பாலே வளர்ந்து கொண்டு போவதுதான் உச்ச நிலை. அந்த அன்பு வளர்ந்து கொண்டு போகிறபோது அன்பினுடைய பரிணாமம் நிகழும். அன்பு அருளாக மாறும்.
அன்பு – தொடர்புள்ளவர் மேல் வரும் அக்கறை.
அருள் – தொடர்பில்லாதவர் மேல் வரும் அக்கறை.
அன்பு இல்லறத்தின் பண்பு.
அருள் துறவறத்தின் பண்பு.
அன்பு பகிர்வுக்கான கருவியே இல்லறம். அன்பு அருளாக மாற மாற துறவறம் வரும். தன்னுடைய தேவையை மற்றவருக்காக விட்டுக்கொடுக்கிற எவரும் துறவிதான். தாய் தந்தையரும் ஒருவிதத்திலே துறவிகளே. இல்லறம் இல்லாவிட்டால் துறவறம் இல்லை.
அதிகாரம் – 5 – குறள் – 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
விளக்கம்;-
திருவள்ளுவர் இல்லற வாழ்க்கைக்கு பதினொரு கடமைகளை வரையறுக்கிறார். இந்த பதினொரு கடமைகளையும் திருமணமானவர்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். முதல் மூன்று குறள்களிலே அதனை வகுத்துக்கூறுகிறார். இந்தக் குறளிலே அடிப்படையான மூன்று கடமைகளை கூறுகிறார்.
நாம் மேலே பார்த்தபடி திருமணமானவருக்குக் கிருகஸ்தன் என்று பெயர். பிரம்மச்சாரி, வானப்பிரஸ்தன், சன்னியாசி ஆகிய மூவரையும் சுமக்கத் தயாராக வேண்டும் கிருகஸ்தன் (இல்லறத்தான்). இதையே இயல்புடைய மூவர்க்கு என்கிறார்.
இயல்பு தானாக அமைவது. இல்லற வாழ்க்கையில் ஈடுபடுகிறவர்கள் இந்த மற்ற மூன்றுபேரையும் அவரவர் நெறியிலே செல்ல துணை செய்ய வேண்டும். அதுவே நல்லாற்றின் நின்ற துணை. (ஆறு – வழி); (ஆற்றுப்படுத்துதல் – வழிப்படுத்துதல்)
இல் என்பது இல்லறத்தைக் குறிக்கிறது. எனவே இது ஆகுபெயர்.
பிரம்மச்சரியம் – கற்றலும் விரதங்காத்தலும்.
மூன்று வயதுக்கு மேலே தான் கல்வி கற்கும் சக்தியை புத்தி பெறுகிறது. மூன்றாம் பிறையிலே சந்திரன் எப்படி மெலிதாகத் தெரிகிறதோ அப்படியேதான் மூன்று வயதுக்கு மேலே ஆற்றலோடு கல்வி பதியும். இயல்பான ஞானம் இந்த வயதிலேதான் உதிக்கிறது. விரதம் காத்தல் என்றால் புலன் பொறி வழியே போகாமல் காத்தல். இறைவனே கல்வி கற்பதற்கு வாய்ப்பாக உடலை அமைத்துக் கொடுத்திருக்கிறபடியால் சஞ்சலப்படாமல் கற்க வேண்டும். கல்வி கற்கும் மாணவன் இல்லறத்தானிடம் சென்று உதவி கேட்பது அவனது உரிமை. அதுபோல அம்மாணவனை ஒழுக்கநெறியில் கண்டித்து உணர்த்துவதும் இல்லறத்தானின் உரிமை.
வானப்பிரஸ்தம்;-
பழைய காலத்திலே இல்லறம் நடத்தியவர்கள் அனைவரும் வீட்டிலே அக்கினி (ஹோமம்)வளர்ப்பார்கள். இதிலே தேவர்களுக்கு வேண்டிய உடை போன்றவற்றை இதிலே அனுப்பிக் கொண்டே இருப்பர். (இதைப்பற்றி வான்சிறப்பு அதிகாரத்தில் விளக்கமாக இருக்கிறது) இல்லறத்தை விட்டு ஓய்ந்தவர்கள் தானாகவே தன் மனைவியோடும் இந்த அக்கினியோடும் வனத்திலே சென்று குடியிருப்பர். பின்பு துறவு நோக்கிச் செல்வர்.
எனவே இல்லறத்தான் (கிருகஸ்தன்) பிரம்மச்சாரிக் கற்றலாகிய பகுதியிலே முடிவுக்குப் போகும் வரை உதவிகள் செய்ய வேண்டும். வானப்பிரஸ்தன் துறவியாகும் வரைக்கும் உதவிகள் செய்ய வேண்டும். துறவிகள் வீடுபேறு அடையும் வரை உதவிகள் செய்ய வேண்டும்.
இவர்கள் மூவரையும் பசி, நோய், குளிர் முதலியவற்றால் இடையூறு வராமல் உணவும் மருந்தும் உறையுளும் கொடுத்துப் பாதுகாப்பது இல்லறத்தானுக்கே உரிய கடமைகள். இந்த உதவிகள் அனைத்தையும் அவ்வந்நெறிகளின் படி வழுவாமல் செலுத்துவதால் நல் ஆற்றின் நின்ற துணை என்றார்.