அஃதாவது, மனத்தின்கண் உவகையை வெளிப்படுப்பனவாகிய இனிய சொற்களைச் சொல்லுதல். இதுவும், விருந்தோம்புவார்க்கு இன்றியமையாது ஆகலின், விருந்தோம்புதலின் பின் வைக்கப்பட்டது.
அதிகாரம் – 10 – குறள் – 91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
விளக்கம்:-
இன்சொல் – இன்சொல்லாவன, ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் – அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள்.
இன்சொலால் – இன்சொல் + ஆல். எனவே ஆல் என்பது அசைநிலை. ஓசையை நிறைவு செய்ய வந்த சொல். எனவே இதற்குப் பொருளைத் தேடக்கூடாது.
இன்சொல்லுக்கான மூன்று நிபந்தனைகளை விதிக்கிறார்.
- அன்போடு கலந்த வார்த்தைகளாக இருக்க வேண்டும்.
- சொற்களில் வஞ்சனைக் கலந்திருக்கக்கூடாது.
- அறம் உடையவர்களால் சொல்லப்படுகிறச் சொல்லாக இருக்கவேண்டும்.
இக்குறளைப் படிக்கின்ற நாமும் இப்படிப் பேசுகிறோமா என்று சோதித்துப்பார்த்துக் கொள்வது நல்லது.
ஈரம் அளைஇ – அன்போடு கலந்தச் சொற்களைப் பேசி அன்பை வெளிப்படுத்துவது.
படிறு இலவாம் – படிறு இன்மை – வாய்மை.
செம்பொருள் – அறம். அறம் உணர்ந்தால் எல்லாவற்றையும் செம்மையாகப் பார்க்கமுடியும். எனவே அறத்தைச் செம்பொருள் என்கிறார் வள்ளுவர்.
சொல் வாயிலிருந்துதானே வரும். ஏன் அதை வாய்ச்சொல் என்று போடவேண்டும் என்று பரிமேலழகர் கேள்வி எழுப்பி அதற்கு விடையும் தருகிறார். அறத்தைப் பேணுபவர்கள் ஒழுக்கத்தில் நிலைத்திருப்பவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் கூடத் தீயச்சொற்கள் பேசமாட்டார்கள். அவர்கள் வாயிலிருந்து தவறிக்கூட அப்படிப்பட்டச் சொற்கள் வராது. எனவேதான் அதனை வாய்ச்சொல் என்று கூறுகிறார் வள்ளுவர் என்று பரிமேலழகர் உரையெழுதுகிறார்.
It was a good article, keep writing.