எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய் தான் சிறந்தது. வெப்ப பூமியான தமிழகத்தில் வாழும் நாம் வாரம் இருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து வர வேண்டும். பெண்கள் என்றால் செவ்வாய் வெள்ளி, ஆண்கள் என்றால் புதன் சனி ஆகிய கிழமைகளில் குளிக்க வேண்டும். ஒருவருக்கு 60 மி.லி நல்லெண்ணெய் போதுமானதாக இருக்கும். இந்த எண்ணையை மிதமாக சூடுபடுத்தி அதில் பூண்டு 3 பல், 5 அல்லது 6 மிளகு, சிறிது சீரகம் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய எண்ணையைக் கைச்சூடு பொறுக்குமளவு எடுத்து உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை தேய்த்து அரைமணி நேரம் ஊற விட்டு பின்பு குளிக்க வேண்டும். கண்டிப்பாக வெந்நீரில் தான் குளிக்க வேண்டும். தலைக்கு சீயக்காய் தூளும் உடலுக்கு நலுங்கு மாவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக ஷாம்பூ, சோப்பு பயன்படுத்தக்கூடாது.
எண்ணெய் தேய்த்துக்குளித்த அன்று வெயிலில் அலையக்கூடாது. குளிர்ந்த உணவுகள் சாப்பிடக்கூடாது. பகலில் தூங்கக்கூடாது. இந்த கிழமைகளில் அமாவாசை வந்தால் அன்றைக்கும் எண்ணெய் குளியல் செய்யக்கூடாது.
மருத்துவ பயன்கள்
கண் பார்வை தெளிவாக இருக்கும்.
வாதம், பித்தம், கபம் என்ற உடலின் சமநிலை சீராக இருக்கும்.
கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்கும். நரைமுடி வராது.
முகப்பருக்கள், வேனல் கட்டி வராமல் பாதுகாக்கும்.
முகம் நன்கு பொலிவாகவும் தேகம் பளபளப்பாகவும் இருக்கும். காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் போன்ற நோய்கள் அண்டாது.