ஒழுக்கம் உடைமை

இலக்கியம்

அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஒதப்பட்ட ஒழுக்கத்தினையுடையர் ஆதல். இது மெய்ம்முதலிய அடங்கினார்க்கு அல்லது முடியாது ஆகலின், அடக்கம் உடைமையின் பின் வைக்கப்பட்டது.

மனிதன் ஏன் ஒழுக்கமுடையவனாக வாழ வேண்டும்? இல்லறத்தைச் சிறப்பிக்க ஒழுக்கம் முக்கியம். மனிதன் சென்று கொண்டிருக்கும் அன்புப்பாதை விருத்தியடைவதற்கும் ஒழுக்கம் அவசியம். அன்பு குறைந்தால் இல்லறத்தின் நோக்கம் சிதைந்துவிடும். ஒழுக்கம் முக்கியம். ஒழுக்கம் முக்கியமாக இருக்க வேண்டுமானால் அடக்கம் முக்கியம். ஆகவே, ஒழுக்கமுடைமைக்கு முன்னதாக அடக்கமுடைமையை வைத்தார். ஐம்புலன்களும் நம்மோடு வரவேண்டும். நாம் ஐம்புலன்களின் பின் செல்லக்கூடாது. மனம், மொழி, வாக்கை அடக்குபவர்களிடம் ஒழுக்கம் நிற்கும். தன்னைத்தானே அடக்குவது ஒழுக்கம். ஒழுக்கம் பற்றி இந்த அதிகாரத்தில் விரிவாகப் படிக்கப் போகின்றோம்.

ஒழுக்கத்திற்கான வரையறையை பரிமேலழகர் கூறுகிறார். ஒவ்வொரு மனிதனுக்கும் தனிவாழ்வு, பொதுவாழ்வு என்று இரண்டு வாழ்க்கை இருக்கின்றது. தனி மனித வாழ்வுக்கு வடமொழியிலே ஆசிரமம் என்று பெயர். பொது வாழ்வுக்கு வர்ணம் என்று பெயர்.

  1. உற்பத்தியாளர் – சூத்திரன்
  2. விநியோகஸ்தர் – வைசியன்
  3. நிர்வாகி – சத்திரியன்
  4. கல்வியாளர் – பிராமணன்

இது சமூகப்பிரிவுகள் ஆகும். இத்தகைய பிரிவுகள் இருந்தால் மட்டுமே அறம் சொல்ல முடியும். பின்னாட்களில் இதிலே உயர்வு தாழ்வு என்று பிரச்சனை வந்ததும் உண்மை. ஆனால், அடிப்படை தவறாகாது.

இப்படி தனிமனித வாழ்வுக்கென்று ஒரு சட்டம் இருக்கும். அது பெரியவர்களால் வகுக்கப்பட்டது. மேற்கூறிய நான்கு பிரிவுகளுக்குள் ஒரு பிரிவுக்குள் அடங்குகிறான் மனிதன். அதற்கென்றும் பெரியவர்கள் வகுத்தச் சட்டங்கள் இருக்கும். இவ்விருச் சட்டங்களையும் சரியாகப் பேணிக் காப்பவர்களே ஒழுக்கமானவர்கள். இந்த ஒழுக்கத்தைப் பேணுவதற்கு அடக்கம் அவசியம். ஆகவே அடக்கமுடைமையின் பின் ஒழுக்கமுடைமை வைக்கப்பட்டது.

அதிகாரம் – 14 – குறள் – 131

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

விளக்கம்:-

ஒழுக்கம் விழுப்பம் தரலான் – ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான், ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும் – அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும்.

ஒழுக்கம் யாருக்குச் சிறப்பினைத் தருமென்றால் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சிறப்பினைத் தரும். உயர்ந்தவர்களுக்கும், இழிந்தவர்களுக்கும் சிறப்பினைத் தருவது ஒழுக்கம்.

எல்லா மனிதர்களும் முதலாவது தனது உயிரையே அதிகமாக நேசிப்பார்கள். பின்பு தான் மற்றவர்களை நேசிப்பார்கள். ஏனென்றால், மற்ற எல்லாவற்றையும் அனுபவிக்கக் காரணமாக இருக்கின்ற உயிர் எல்லாப் பொருளைவிடவும் சிறந்தது.

ஆனால் திருவள்ளுவர் அப்படிப்பட்டச் சிறப்பான உயிரைவிடவும் ஒழுக்கமே சிறந்தது என்கிறார். ஏனென்றால், உயிர் நன்மையையும் தரும் தீமையையும் தரும் ஆனால், ஒழுக்கம் நன்மையை மட்டுமே தரும்.

உயிரா? ஒழுக்கமா? என்று வாழ்க்கையில் நெருக்கடி வந்தால் ஒழுக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரை விடவும் தயாராக இருக்கவேண்டும்.

4 thoughts on “ஒழுக்கம் உடைமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *