பரிமேலழகரின் அதிகார முன்னுரை:-
அஃதாவது, தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. இனியவை கூறி இல்லறம் வழுவாதார்க்கு உய்திஇல் குற்றம் செய்ந்நன்றி கோறலேயாகலின், அதனைப் பாதுகாத்துக் கடிதற்பொருட்டு, இஃது இனியவை கூறலின் பின் வைக்கப்பட்டது.
அறிதல் – மறவாமை என்று பொருளாகும். ஒருவர் செய்த நன்மையை மறவாதிருப்பது நன்றியுணர்வு ஆகும். இனிய சொற்களைப் பேச ஆரம்பித்தால் மட்டுமே ஒரு தம்பதியரால் இல்லற வாழ்வில் நிலைத்திருக்க முடியும். அதாவது வழுவாதிருக்க முடியும்.
உய்திஇல் – பிராயச்சித்தம் செய்ய முடியாத குற்றம்.
உலகியலில் அறியாமல் சிலக் குற்றங்களை நாம் செய்ய நேரிடும். அப்படி இன்னக் குற்றத்திற்கு இன்னப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று நமது தமிழ் தர்ம சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. ஆனால் அந்த நூல்கள் எதுவும் நன்றி மறந்தவனுக்கு என்னப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று கூறவில்லை. எனவே நன்றியின்மைக்குப் பிராயச்சித்தம் இல்லை என்று அறிய முடிகிறது.
கோறல் – கொல்லுதல்
செய்ந்நன்றியைப் பாதுகாத்து அதனை மறத்தலை கடிதற்பொருட்டு இந்த அதிகாரம் இனியவை கூறலின் பின் வைக்கப்பட்டது.
அதிகாரம் – 11 – குறள் – 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
செய்யாமல் செய்த உதவிக்கு – தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு, வையகமும் வானகமும் ஆற்றல் அரிது – மண்ணுலகமும் விண்ணுலகமும் கைம்மாறாகக் கொடுத்தலும் ஒத்தல் அரிது.
விளக்கம்:-
முதல் மூன்று குறள்களிலும் மூன்று விதமான உதவிகளைப் பற்றி சொல்லப்போகிறார்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமுதாயத்தில் தேவையில் உள்ளவருக்கு நாம் முதல் ஆளாக இறங்கிப்போய் செய்யும் உதவியே கைம்மாறு கருதாத உதவியாகும். இப்படி இல்லறத்தான் நன்றியறிதலைத் தொடக்கிவைக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். இப்படிச் செய்கிற உதவிக்கு வையகமும் வானகமும் கூட நிகராகாது என்கிறார்.
எதிர்பார்ப்பு இல்லாமல் உதவுபவரே வள்ளல் எனப்படுவார்.
ஆனால் இவ்வுலகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் நீ எனக்குச் செய்தால் நான் உனக்குச் செய்வேன் என்று பிரதிபலன் எதிர்பார்த்தே உதவி செய்கின்றனர். இது உதவிதான் என்றாலும் இரண்டாவது ரக உதவியே.