ஆசிரியர் – திருவள்ளுவர்.
காலம் – இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை.
நூற்குறிப்பு;-
இந்நூல் பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். உலகப்பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. தமிழர்களின் மறைநூலாகவும் இந்நூல் விளங்குகிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வாழ்வியல் முறைகளையும் வைப்புமுறை என்ற தொல்காப்பிய இலக்கணமுறைப்படி எழுதியிருக்கிறார் வள்ளுவர். எக்காலத்துக்கும் பொருந்துகிற அறக்கருத்துக்களையும் நீதிநெறிகளையும் இந்நூல் கூறுகிறது. விவிலியத்திற்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் நூலாகவும் இருக்கிறது. அறம், பொருள், இன்பம் என்ற முப்பிரிவுகளைக்கொண்டது. இந்நூல் மொத்தம் 133 அதிகாரங்களைக் கொண்டது. ஒரு அதிகாரத்திற்கு பத்துக்குறள் வீதம் 1330 குறள்களைக் கொண்டது. திருக்குறளைப் பாராட்டி எழுதப்பட்ட நூல் திருவள்ளுவமாலையாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கையால் பாதுகாக்கப்பட்டு தமிழுக்குக் கிடைத்திருக்கும் திருக்குறளுக்கு நிகரான ஒரு நூல் உலகின் எந்த ஒரு மொழிக்கும் கிடைத்திராது என்பது திண்ணம். தொல்காப்பியம் போன்ற ஓர் இலக்கண நூலும் திருக்குறள் போன்ற ஓர் அறநூலும் தமிழன்றி உலகின் வேறு எந்த வளர்ந்த மொழியிலும் இல்லை என்பதே உண்மை.
நூலின் பிரிவுகள்;-
அறத்துப்பால் – 38 அதிகாரங்கள்
பொருட்பால் – 70 அதிகாரங்கள்
காமத்துப்பால் – 25 அதிகாரங்கள்
திருக்குறளுக்கு உரையெழுதியவர்கள்;-
- மணக்குடவர்
- தருமர்
- தாமத்தர்
- நச்சர்
- பரிதியார்
- திருமலையார்
- மல்லர்
- பரிப்பெருமாள்
- காளிங்கர்
- பரிமேலழகர்
இவர்கள் எல்லோருடைய உரையிலும் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர்.
பாயிரவியல்;-
பாயிரம் என்றால் முன்னுரை என்று பொருளாகும். திருக்குறளுக்கு முன்னுரையாக அமைக்கப்பட்ட அதிகாரங்கள் முதல் நான்கு அதிகாரங்களாகும்.
- கடவுள் வாழ்த்து
- வான் சிறப்பு
- நீத்தார் பெருமை
- அறன் வலியுறுத்தல்.
Thank you for writing this article, I really enjoyed reading it