நடுவு நிலைமை

இலக்கியம்

அஃதாவது, பகை, நொதுமல், நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமை. இது நன்றி செய்தார்மாட்டு அந்நன்றியினை நினைத்த வழி சிதையுமன்றே? அவ்விடத்துஞ் சிதையலாகாது என்றற்குச் செய்ந்நன்றி அறிதலின் பின் வைக்கப்பட்டது.

மூன்று வகையான உறவு நிலைகள் உண்டு.

  1. பகை
  2. நட்பு
  3. நொதுமல்

இந்த மூவரிடத்தும் நடுவுநிலைமையோடு நடந்துகொள்ளும் திண்மை இருக்கவேண்டும். இம்மூவரையும் சமமாக நினைத்து நடத்த வேண்டும். ஒருவர் செய்த நன்மையை நினைத்தால் இந்த இடத்தில் நடுவுநிலைமை சிதையும். எனவேதான் செய்ந்நன்றி அறிதல் என்னும் அதிகாரத்திற்குப் பின்பு இந்த அதிகாரத்தை வைத்துள்ளார். சமூக வாழ்க்கை என்று வரும்போது தலைவராக இருப்பவர் நன்றியை நினைத்து நடுவுநிலைமை தவறிவிடக்கூடாது. நேர்மையாகத் தவறைச் சுட்டிக் காட்டும் திண்மையோடு நடந்துகொள்ள வேண்டும்.

அதிகாரம் – 12 – குறள் – 111

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்

பாற்பட்ட டொழுகப் பெறின்.

விளக்கம்:

தகுதி என ஒன்றே நன்று – நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமே நன்று, பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் – பகை, நொதுமல், நண்பு எனும் பகுதிதோறும் தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின்.

தகுதி என்ற ஒன்று நன்றே என்று வள்ளுவர் கூறுகிறார். நன்றே என்பது உறுதிப்படுத்த வந்த ஏகாரம். அந்த ஏகாரத்தை தகுதி என்ற ஒன்றே நன்று என்று பரிமேலழகர் கூறுகிறார்.

நடுவுநிலைமை என்பது ஒரு தகுதியுடைய பண்பு. அந்தத் தகுதியுடைய பண்பை தகுதி என்ற சொல்லாலே குறித்தார் வள்ளுவர் என்று கூறுகிறார் பரிமேலழகர்.

பகுதி – நட்பு, பகை, நொதுமல்.

பகுதியாற் – இங்கே ஆன் உருபு தோறும் என்பதன் பொருளாய் நின்றது. அதாவது நட்பு, பகை, நொதுமல் தோறும் அப்பாற்பட்டு ஒழுகுவது என்று படிக்க வேண்டும்.

தலைவர் என்ற பதவியில் இருக்கும்போது நட்பு, பகை, நொதுமல் இவைகளுக்கு அப்பாற்பட்டு நடுவுநிலைமையோடு ஒழுகுவது எளிதான விடயமல்ல. நட்பு, பகை, நொதுமல் இவைகளுக்கு அப்பாற்பட்டு ஒழுகுவாயானால் அது ஒன்றே தகுதி என்று கூறுவதால் இது ஐயக்கருத்து ஆகும். எனவேதான் பெறின் என்று குறளை முடிக்கிறார் வள்ளுவர்.

இக்குறள் நடுவுநிலைமையின் சிறப்புப் பற்றிக்கூறுகிறது.

22 thoughts on “நடுவு நிலைமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *