பயோ என்சைம் தயாரிப்பது எப்படி?

தற்சார்பு வாழ்க்கை

இதை நாம் மிக எளிதாக வீட்டிலேயே தயாரிக்கலாம். 15:10:3:1 இதுதான் அதற்கான ரேஷ்யூ. இதனைத் தயாரிப்பதற்குத் தொண்ணூறு நாட்கள் தேவை . முதல் முப்பது நாட்கள் தினந்தோறும் ஐந்து முறையாவது திறந்து திறந்து மூட வேண்டும். அடுத்த அறுபது நாட்கள் சூரிய ஒளி படாத இடத்தில் அப்படியே வைத்துவிடவேண்டும். இந்த நாட்களில் தான் நொதித்தல் நடைபெறும். தொண்ணூறு நாட்கள் கழித்து நாம் திறக்கும் போது வெண்மை படர்ந்திருக்கும். அதுவே சுத்தமான பயோ என்சைம்.

பயோ என்சைம் எதற்கெல்லாம் பயன்படும்?

துணி துவைக்கலாம். தரை துடைக்கலாம். கழிவறையைக் கழுவ பயன்படுத்தலாம். வாகனங்களைக் கழுவ பயன்படுத்தலாம். துணி துவைப்பதற்கு அதிக தண்ணீர் தேவைப்படாது. ஆனால் அழுக்கு நன்றாக போய்விடும். எல்லாவற்றுக்கும் மேலாக கொசுவை விரட்டும். ஒருமுறை தயாரித்து பயன்படுத்திப்பாருங்கள். குறிப்பாக பெண்களுக்கு வேலை எளிதாகும்.

தேவையான பொருட்கள்:-

காற்றுப்புகாத பிளாஸ்டிக் டப்பா

தண்ணீர் – 600 மி.லி

எலுமிச்சை அல்லது சாத்துக்குடி தோல் – 180 கிராம்

நாட்டுசர்க்கரை – 66 கிராம்

இதே ரேஷ்யூவுடன் எத்தனை மடங்கும் பயோ என்சைம் தயாரிக்கலாம். உதாரணமாக இருமடங்கு செய்வதற்கு இரண்டால் (600×2 =1200) (180×2 = 360) (66×2 =132) பெருக்கி பொருட்களை அதிகப்படுத்தி செய்யலாம்.

இருமடங்கு:

தண்ணீர் – 1200மி.லி

எலுமிச்சை தோல் – 360 கிராம் நாட்டுச் சர்க்கரை – 132 கிராம்.

மூன்று மடங்கு:

தண்ணீர் –  1800 மி.லி

எலுமிச்சைத் தோல் – 540 கிராம்

நாட்டுச்சர்க்கரை – 198 கிராம்

நான்கு மடங்கு:

தண்ணீர் – 2400 மி.லி

எலுமிச்சைத் தோல் – 720 கிராம்

நாட்டுச்சர்க்கரை – 264 கிராம்

நான் தயாரித்ததை படத்துடன் காட்டியிருக்கிறேன். என்னிடம் ஐந்து லிட்டர் கொள்ளளவுள்ள வாயகன்ற ப்ளாஸ்டிக் கண்டெய்னர் இருந்தது. எனவே நான் மேலே குறிப்பிட்ட நான்கு மடங்கு அளவில் பயோ என்சைம் தயாரித்தேன். எப்படி தயார் செய்தேன் என்பதை படத்தில் காணலாம்.  எனக்கு எலுமிச்சைப்பழம் மலிவான விலையில் கிடைத்தது. எனவே அதை வைத்து தயாரித்தேன்.

படத்தில் காட்டியபடி பாட்டிலில் பாதி அளவு இடம் இருக்க வேண்டும். தொண்ணூறு நாட்கள் கழித்து வடிகட்டியதை கீழ்க்கண்ட படங்களில் காணலாம்.

பயோ என்சைம் மற்றும் பல்ப் தனியாகப் பிரித்தெடுத்ததைப் படத்தில் காணலாம். பல்ப்பை நம் வீட்டிலிலுள்ள மிக்சியில் பயோ என்சைம் கலந்து அரைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் விட்டு அரைக்கக்கூடாது. கறை இருக்குமிடத்தில் இந்த பல்ப்பைப் போட்டுத் தேய்க்க கறை நன்றாக நீங்கும். காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்துப்பயன்படுத்த வேண்டும். தரை துடைக்கப் பயன்படுத்தலாம். தரை மிக அழகாக சுத்தமாகும். தொடர்ச்சியாக நாம் பயன்படுத்தும் போது நம் வீட்டுக்குள் கொசு வராது. ஆம், பயோ என்சைம் இயற்கை கொசுவிரட்டி. துணி துவைக்கப் பயன்படுத்தும் லிக்விட்டுக்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம். அழுக்கு நன்றாகப் போய்விடும். குறைவான பணத்திலேயே தயாரித்து விடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *