மக்கட்பேறு

இலக்கியம்

முன்னுரை;-

இறைவன் நமது வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்துள்ளார். குழந்தைப்பருவத்திலிருந்து படிப்படியாக நாம் வளர்ந்து வருகிறோம். அப்படி வளர்ந்து வரும்போது நமது ஆசைகளும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. குழந்தையாயிருக்கும் போது பொம்மை முதலிய விளையாட்டுப்பொருட்கள் மீது ஆசைப்படுகிறோம். அதை விடவும் கொஞ்சம் வளர்ந்த பின்பு நடைவண்டி, பின்பு மிதிவண்டி, பின்பு உந்துருளி (இரண்டு சக்கர வாகனம்) பின்பு திருமணம், மனைவி என்று ஆசைகள் அந்தந்த வயதுக்கேற்ப தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. இதில் தான் வாழ்க்கையினுடைய தொடர்ச்சியும் சுகமும் இருக்கின்றன.

விவிலியமும் இதைப்பற்றிப் பின்வருமாறு கூறுகிறது.

நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப் போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். 1கொரிந்தியர் 13:11

இதுவே பூரண நிலை. இந்த மனிதனுடைய நாட்டம் இன்பத்தை நோக்கியதாகவே இருக்கிறது.

இந்த இன்பம் என்றால் என்ன?

நமது உடம்பில் அறிவுக்கருவிகள் ஐந்து இருக்கின்றன. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி. இக்கருவிகள் புலனுகர்ச்சியை அடைகிறபோது அந்தக்கருவியினாலே சுகம் உண்டாக வேண்டும்.

சுவையான உணவு – வாயாலே கிளர்ச்சி

சங்கீதப் பாடல்கள் – காதாலே கிளர்ச்சி

வாசனைப்பொருட்கள் – மூக்காலே கிளர்ச்சி

அழகான இயற்கைக் காட்சிகள் – கண்களாலே கிளர்ச்சி

தொடுதல் – உடம்பாலே கிளர்ச்சி

இந்த உறுப்புகளுக்குள்ளே ஏற்படுகிற புலனுகர்ச்சியினாலே ஏற்படுகிற கிளர்ச்சிக்கு இன்பம் என்று பெயர்.

இந்த இன்பத்திற்குள்ளே எந்த இன்பம் சிறந்தது?

நறுமணம் மிக்க மலர்களை (மல்லிகை, முல்லை)நுகருகிற போது மூக்கிற்கு மட்டுமே இன்பம் தரும்.

லட்டு என்ற இனிப்புப்பண்டத்தைக் கண்களால் பார்த்தால் இன்பம், நுகர்ந்தால் ஏலக்காயின் நறுமணம், சுவைத்தால் இனிப்புச்சுவை இப்படி மூவகையான இன்பங்களும் நமக்குக் கிடைக்கிறது.

ஐம்புலன்களுக்கும் இன்பம் தருகின்ற பொருள் இருக்கிறதா? என்று ஆராய்ந்தால் ஒரு பொருள் இருக்கிறது. அதுவே ஆடவனுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆடவனும் தருகின்ற இன்பம். அதுவே முதன்மை இன்பம்.

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள.

ஆனால் நம் தமிழர்கள் இதற்கு சிற்றின்பம் என்றே பெயர் வைத்தார்கள். ஏனென்றால் இந்த இன்பத்தைத் தருகின்ற பொருளுக்கு ஒரு ஆயுள் உண்டு. அதை அனுபவிக்கிறவனுக்கு ஒரு ஆயுள் உண்டு. இந்த இன்பம் சிறிது நேரம் மட்டுமே. பின்பு இல்லாமல் போய்விடும். ஆகவே இந்த இன்பம் ஐம்புலன்களுக்கு இன்பம் தந்தாலும் அது அழிபொருள்தான். அனுபவிக்கிறவனும் அழிகிறான். அதனாலே அந்த இன்பமும் அழிகிற இன்பம். சிறந்த இன்பமானாலும் சிற்றின்பம்.

பேரின்பம் என்றால் என்ன?

தருகிற பொருள் அழியாமல் இருக்க வேண்டும். அதனோடு சேருகிற நாமும் அழியாமல் இருக்க வேண்டும். இப்படி இருவரும் அழியாமல் இருக்கும் போது இன்பமும் அழியாமல் இருக்கும். இது இறைவனிடம் மட்டுமே இருக்கிறது. இறைவன் அழியமாட்டான். நாமும் அழிய மாட்டோம். இன்பமும் அழியாது. இந்தப் பேரின்பத்திற்கு உவமை சொல்ல சிற்றின்பத்தைத் தவிர வேறொன்றுமில்லை. ஆகவேதான் திருவாசகம் உட்பட அனைத்துத் தமிழ் நூல்களும் சிற்றின்பம் பற்றி பாடியிருக்கின்றன. புலவர்கள் இதை ஒரு வழக்கமாகவே பாடியிருக்கின்றனர்.

மக்கட்பேறு பாயிரம்

அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாகவிறுக்கப்படூஉங் கடன் மூன்றனுள், முனிவர்கடன் கேள்வியானும், தேவர்கடன் வேள்வியானும், தென்புலத்தார்கடன் புதல்வரைப்பெறுதலானுமல்லது இறுக்கப்படாமையின், அக்கடனிறுத்தல் மக்களைப்பெறுதல். அதிகாரமுறைமை மேலே பெறப்பட்டது.

இருபிறப்பாளர் என்பதற்கு இரு அர்த்தங்கள் உண்டு.

  1. ஒருவன் ஒரு தாய் வயிற்றிலிருந்து உருவெடுத்துப்பிறக்கிறான் இது ஒரு பிறப்பு.
  2. உபநயனம் – பூணூல் சடங்கு – குறித்த ஒரு கொள்கையை என்னுடைய கொள்கையாக நான் பூணுகிறேன். இதற்கான ஒரு அடையாளக்குறிப்பே பூணூல். இது ஒரு பிறப்பு.

இந்தப் பூணூல் பிராமணர்களுக்கு மட்டும் அல்ல.

நால் வருணத்தார்;-

  1. பிராமணன்
  2. சத்திரியன்
  3. வைசியன்
  4. சூத்திரன்

பழைய காலத்திலே இதிலே மூன்று வருணத்தவர்க்குப் பூணூல் போடுகிற உரிமை இருந்தது. இந்த மூன்று வருணத்தவருக்கும் இரு பிறப்பாளர் என்ற பெயர் உண்டு. எப்பொழுது இலட்சியத்தைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பூணூல் போடுகிறானோ அப்பொழுது இந்தப் பெயர் உண்டு. இவர்களையே இருபிறப்பாளர் என்று பரிமேலழகர் கூறுகிறார்.

இலட்சியத்தைப் பூண்டவர்களே இரண்டாவது பிறவி எடுத்தவர்கள். எனவே இலட்சியம் பூண்டவர்களுக்கே தெரியும் நாம் பிறக்கும்போதே மூன்று கடனோடு பிறக்கிறோம். இல்லறத்தாருக்கு இந்த மூன்று கடமையைத் தீர்க்கிற கட்டாய கடமை உண்டு.

முனிவர் கடன் கேள்வியானும்

இந்தத் திருக்குறளை இயற்றியத் திருவள்ளுவர் உட்பட பல முனிவர்களும் எத்தனையோ நல்ல விடயங்களை நமக்கு விட்டுச்சென்றிருக்கின்றனர். இவர்கள் கடனை எப்படித் தீர்ப்பது?

இந்தத் திருக்குறள் புத்தகமே நாம் நல்ல வழியில் வாழ்வதற்கேத் தந்திருக்கிறார் திருவள்ளுவர். ஆகவே, இந்த நூலைப் படித்து உணர்வதே அக்கடனைத் தீர்ப்பதாகும். வழிப்படுத்துவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் கொடுத்த நூலை படித்து உணர்வதே முனிவருக்குச் செய்யும் பிரதிபலனாகும். இதுவே முனிவர் கடனைத் தீர்ப்பதாகும்.

தேவர்கடன் வேள்வியானும்

ஒவ்வொரு உயிர்ப்பொருளுக்கும் ஒரு அதிதேவதை உண்டு. அதனால்தான் இந்தக்காலத்திலும் சித்த வைத்தியர்கள் ஒரு மூலிகைச்செடியின் இலைகளை பறிப்பதற்கு முந்தின நாள் மாலையில் சென்று உலகத்தினுடைய நன்மைக்காக இந்தத் தாவரத்தினுடைய ஒரு பகுதியை நான் எடுக்க வேண்டியிருக்கிறது. இது உன் ஆளுகைக்குரியது. இதில் ஒரு பகுதியை எடுக்க உன் அனுமதி வேண்டும் என்று அந்த மூலிகைக்குரிய அதிதேவதையிடம் பிரார்த்தனை செய்வார்கள். அடுத்த நாள் காலையில் அந்த மரம் அல்லது செடி சிதையா வண்ணம் ஒரு பாகத்தை எடுப்பார்கள். இதுவே முறைமை.

எப்படியென்றால் இந்த உலகத்தின் அனைத்து உயிரினங்களும் ஒரு சங்கிலிப்பின்னலாக பிணைக்கப்பட்டிருக்கிறது. அதுபோலவே இந்த அதிதேவதைகளுக்கும் மனிதருக்கும் தொடர்பு உண்டு. நம்மாலே தேவர்கள் வாழ்வார்கள். தேவர்களாலே நாம் வாழ்வோம். இந்தத் தொடர்பைக் கடவுள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். எனவே தேவர்களுக்குத் தேவையான உணவு முதலியவற்றை நாம் அக்கினி வளர்த்து வேள்வி செய்து அந்த வேள்வியிலே ஆகுதிகளைப் போட்டு தேவர்களைப் ப்ரீதி செய்ய வேண்டும். இதுவே தேவர்களுக்குச் செய்யும் கடனாகும்.

பிதுர் கடன் புதல்வராலும்

தெற்கை இடமாகக் கொண்டு இருக்கிறவர்கள். இவர்கள் யாரென்றால் சில பிதுர்த் தெய்வங்கள். பிரம்ம தேவன் உலகத்தைப் படைக்கும் போது முதலில் கொஞ்சம் பேரை படைத்துவிட்டு என்னை நீங்கள் பூசிப்பீர்களாக என்று அவர்களை நியமித்தார். இப்படிப் படைக்கப்பட்டவர்கள் நாங்கள் ஏன் பிரம்மனை பூசிக்க வேண்டும்? நம்மை நாமே பூசித்துக் கொள்வோம் என்று கூறி அவர்களையே வணங்கிக் கொண்டார்கள். உடனே பிரம்மதேவனுக்குக் கோபம் வந்துவிட்டது. நாம் நியமித்த வேலையை இவர்கள் செய்யவில்லையே என்று அவர்களை சபித்தார். உடனே அவர்கள் தவறை உணர்ந்து பிரம்மனிடம் சாப விமோசனம் கேட்டார்கள்.

அவரோ பிரம்ம புத்திரரிடம் விமோசனம் கேளுங்கள் என்று கூறிவிட்டார். பிரம்ம புத்திரரும், குழந்தைகளே உங்களை பிரம்ம தேவன் சொன்ன சாபத்திலிருந்து நீக்குகிறோம். நீங்கள் போய் தென்திசையில் இருங்கள் என்று கூறுகின்றனர். திரும்பவும் இவர்கள் பிரம்ம தேவனிடம் வந்த போது என் புத்திரராலே நீங்கள் குழந்தைகள் என்று அழைக்கப்பட்டபடியால் சந்ததியாக இருக்கக் கூடிய அந்த உயர்வுக்குக் காரணமாகுங்கள் என்று கூறி தென் திசையை அவர்கட்கு இடமாக நியமித்தார். இவர்களே பிதுர்த் தெய்வங்கள்.

இந்தப் பிதுர்த் தெய்வங்களுக்கு என்ன வேலையென்றால் நம் மூதாதையர்களை நினைந்து நாம் செய்கின்ற தானதருமங்களினுடைய பயனை அந்த மூதாதையர்களுக்குக் கொண்டு சேர்ப்பது. நாம் நமது பாட்டன் பாட்டிகளுக்குத் திவசம் கொடுக்கிறோம் என்றால், அந்தப் பாட்டன் பாட்டி அவருடைய பயனுக்கு ஏற்ப ஏதோ ஒரு பிறவியில் இருப்பார். இந்த இடத்தில்தான் இந்தப் பிதுர்த்தெய்வங்கள் வேலை செய்கின்றனர். நாம் செய்கிற திவசத்தின் பயனை ஏற்று அவர்களிடத்திலே கொண்டு போய்ச் சேர்ப்பது. இப்படி நமது முன்னோர்களுக்கு நாம் நிச்சயம் கடன்பட்டிருக்கிறோம். ஏனென்றால், இன்றைக்கு நமக்கு இருக்கும் இந்த அறிவும் ஆற்றலும் நம் முன்னோர்களிடமிருந்து வந்ததுதான். ஆகவேதான், நாம் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறோம். இந்தக் கடனை எப்படித் தீர்ப்பது? அதற்குத்தான் புதல்வர்கள் கட்டாயம் வேண்டும். புதல்வர்கள் வேண்டுமானால் பரம்பரைத் தொடர வேண்டும். பரம்பரைத் தொடர்வதற்குப் புதல்வர்கள் அவசியம்.

இந்தப் புதல்வரைப் பெறுவதின் அவசியத்தை இந்த அதிகாரத்தில் கூறப்போகிறார் வள்ளுவர்.

அதிகார முறைமை மேலே பெறப்பட்டது.

இல்வாழ்க்கை

வாழ்க்கைத் துணைநலம்

மக்கட்பேறு

இப்படி அடுக்குமுறையில் அழகாக இருப்பதையே அதிகார முறைமை என்கிறார்.

அதிகாரம் – 7 – குறள் – 61

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற.

விளக்கம்;-

எந்த ஒரு கல்வியானாலும் அதற்கான முன்னறிவு அவசியம். பத்தாம் வகுப்புக்குச் செல்வதற்கு ஒன்பதாம் வகுப்புத் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். அப்படியானால் முதலாம் வகுப்பைப் படிப்பதற்கு முன்னறிவு எங்கிருந்து வந்தது? அதை வருகிறபோதே ஒருவன் கொண்டுவருகிறான். இதையே அறிவறிந்த என்கிறார் வள்ளுவர்.

அறிதற்குரிய அறிவைக் கொண்டவனாகிய பிள்ளையாக இருக்க வேண்டும். பிறக்கிற பிள்ளையெல்லாம் படித்த பிள்ளையாக இருக்க முடியாது. ஆனால் படிக்கக் கூடிய பிள்ளையாக இருக்கலாம். அதற்குப் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

நாம் பெறப்போகிற பிள்ளை நாம் செய்கிற புண்ணிய பாவத்திற்கு ஏற்ப பிறக்கிறது. ஆகவே, அறிவுக்குரிய பிள்ளை பிறக்க வேண்டுமானால் அறிவை அறியக்கூடிய ஒரு ஆன்மா வந்து சேர வேண்டும். அறிவு வர வேண்டுமென்றால் அறிவோடு பிறக்க முடியாது.

அறிவை அறிகிற அறிவோடு பிறக்கலாம். அந்த ஆன்மா அந்தத் தகுதியோடு பிறக்க வேண்டும்.

இதையே அறிவறிந்த மக்கட்பேறு என்கிறார் வள்ளுவர்.

இப்படி ஒரு பிள்ளை எனக்குப் பிறக்க வேண்டுமானால் அது புண்ணியத்தின் மூலமாக பிறந்த பிள்ளையாக இருந்துவிட்டால் அதற்கு நிகர் இந்த உலகத்தின் பேறுகளில் ஒன்றுமில்லை. முன்னறிவு என்பது நல்வித்து.

அறிவு இருக்கத் தேவையில்லை. அறிவை அறிவதற்கான அறிவு இருந்துவிட்டாலே போதும் அறிவு தானாக வந்துவிடும். விதை இருந்தால் பயிர் தானாக வரும்.

விதை – காரணம்

பயிர் – காரியம்

இங்கே மக்கள் என்பது ஆண்மக்களையே குறிக்கிறது என்கிறார் பரிமேலழகர். எப்படி என்று பார்க்கலாம்.

பெண்மையின் குணங்கள்;-

அச்சம்;-

இயல்பான பயம் எப்போதும் இருக்கும். விதிவிலக்கான பெண்களைத்தவிர.

மடம்;-

அறிவிலி என்று அர்த்தம் அல்ல. பெண்கள் மட்டுமே விரதம் முதலிய ஒழுக்கங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு செய்வார்கள். இதற்குப் பெயர் தான் மடம்.

நாணம்;-

வெட்கம் இது பெண்மையின் அழகு. பெண்ணுக்கு மட்டுமே உரித்தான இயல்பு.

பயிர்ப்பு;-

பிற ஆடவர் தீண்டுவதால் வருகின்ற அருவருப்பு.

பரிமேலழகர் எதற்கு இப்படிச் சொன்னார் என்றால் அறிவு பெண்ணுக்கு இருந்தால் பெண்ணின் இயல்பு இலட்சணம் போய்விடும். இயல்பே முக்கியம். அறிவு பெண்களுக்குப் பொருத்தமானதல்ல என்கிறார். கல்வியைச் சொல்லவில்லை. கல்வி என்பது வேறு. அறிவு என்பது வேறு. பெண்ணின் அறிவு வரையறைக்குட்பட்டது.

1 thought on “மக்கட்பேறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *