எழுத்துக்களின் ஓசை அளவு;-
உயிர்க்குற்றெழுத்திற்கு ஒரு மாத்திரை. இதன் அளவு கண் சிமிட்டும் நேரம். உயிர் நெட்டெழுத்திற்கு இரண்டு மாத்திரை. மெய்யெழுத்திற்கு அரை மாத்திரை. உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் சேரும் போது உயிர் மெய்யெழுத்து பிறக்கிறது. க் + அ = க இதில் ‘க்’ என்ற எழுத்திற்கு அரை மாத்திரை. ‘அ’ என்ற எழுத்திற்கு ஒரு மாத்திரை. ஆக மொத்தம் ஒன்றரை மாத்திரை வருகிறது. ஆனால் உயிர் மெய்யெழுத்திற்கு அரை மாத்திரை தான் வரும்.
ஏனென்றால் உயிரும் மெய்யும் சேரும் போது மெய்யினுடைய வடிவும் உயிரினுடைய இயக்கமும் இருக்கும். இதுவே உயிர் மெய்யெழுத்து. க்+அ= க இங்கே ´க’ என்ற எழுத்து புள்ளி கெட்டு வந்திருக்கிறது. ‘அ’ என்ற உயிரெழுத்தின் வரி வடிவம் இல்லை. ஆனால் ஓசை வடிவம் வருகிறது. எனவே தான் அரை மாத்திரை.
ஆயுத எழுத்து ஃ ன் விளக்கம்;-
ஃ என்பது திரு நங்கை எழுத்து. திருநங்கையரை ஆணாகப் பார்த்தால் ஆணாக இருப்பார். பெண்ணாகப் பார்த்தால் பெண்ணாக இருப்பார் ஃ என்ற எழுத்தை எப்படி பார்த்தாலும் அதனுடைய வரி வடிவம் மாறுவதில்லை. ஃ என்ற எழுத்து எங்கே பிறக்கும் என்றால் ஒரு உயிர்குற்றெழுத்திற்குப் பின்பாகவும், வல்லின உயிர்மெய் எழுத்திற்கு முன்பாகவும் பிறக்கும்.
எவ்வளவு பெரிய ஆற்றல் பெற்றவராயினும் தன் கருத்தை மொழியிலே ஏற்றி அனுப்புகிற போது அது (40%) நாற்பது சதவீதம் மட்டுமே போய்ச்சேரும். உணர்வு ஒத்துப்போகாவிட்டால் மொழியினுடைய பயன்பாடு குன்றிப்போய்விடும்.
உதாரணம்;- ஆசிரியர் பாடம் நடத்துகிறார் என்றால் பாடம் படிக்க வேண்டும் என்ற ஒத்த உணர்வோடு இருந்தால் மட்டுமே படிக்க முடியும். வேறு சிந்தனையோடு வகுப்பில் இருந்தால் படிக்க முடியாது.
அறிவுள்ளவர்கள் எப்போதும் குறைவாகவே பேசுவர். இதைத்தான் நன்னூலும் ‘சுருங்கச்சொல்லல் விளங்க வைத்தல்’ என்று கூறுகிறது. ஓர் எழுத்து ஒரு சொல்லாகும். ஒரு அட்சரம் ஒரு சொல். உதாரணம் – நீ, வா , தா, போ. ஏழு அட்சரம்தான் தமிழிலே ஆகக்கூடிய ஒரு சொல்லாகும். உதாரணம் – உத்திரட்டாதி. அட்சரமற்ற சத்தங்களும் மொழியாகும்.
மொழியின் மூன்று நிலைகள்;-
மொழிக்கு மூன்று நிலைகள் உண்டு. முதலாவது சொல்லைப்படிக்க வேண்டும். இரண்டாவது பொருள். பொருளைப்படிக்கின்ற பொழுது மொழி தேவைப்படாது. அடுத்து அந்தப் பொருள் உணர்வாக மாற வேண்டும். சொல் பொருளாக மாறி உணர்வாக மாற வேண்டும். அப்பொழுதுதான் மொழி பூரணப்படும்.
உதாரணம்
தமிழர் – அம்மா அப்பா
இசுலாமியர் – உம்மா வாப்பா
ஆங்கிலேயர் – மம்மி டாடி
இந்தச் சொற்களில் வேறுபாடு வருகிறது. அம்மா, உம்மா, மம்மி
பொருள் வேறுபடுகிறது. எப்படியென்றால் தமிழருக்கு அம்மா என்றவுடன் தாலிக்கொடி, குங்குமம், மல்லிகைப்பூ அணிந்த தாய் நினைவுக்கு வருவாள். இசுலாமியருக்கு முக்காடிட்டுக்கொண்ட தாய் நினைவுக்கு வருவாள். ஆங்கிலேயருக்கு கவுண் அணிந்த தாய் நினைவுக்கு வருவாள்.
ஆனால், அனைவருக்குமே அம்மா என்றவுடனே அவரது அன்பு, கனிவு அக்கறை என்ற உணர்வு ஒன்றுபடுகிறது. எனவே மொழி சுத்தம் பெற வேண்டுமென்றால் அதை உணர்வாக்கினால் தான் அதன் பயனைப்பெற முடியும்.
இவைகளையெல்லாம் நோக்கும்பொழுது தமிழ்மொழி தெய்வ மொழி என்றே விளங்குகிறது.