அட்சரங்கள்;-
நம் அனுபவங்களை பிறரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்றால் அதற்கு மொழி தேவை. இன்பத்தைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் போது அது மிகும். துன்பத்தைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் போது அது குறையும். ஆதி மனிதன் தன் கருத்தை மற்றவரிடம் சேர்ப்பிக்க என்ன வழி என்று சிந்தித்தான். சத்தம் என்ற ஒன்றை கண்டு கொள்கிறான். சத்தத்தை வைத்து எண்ணத்தைப் பகிர்ந்து கொள்ள நினைத்தான். சத்தம் கூறுபடுத்தப்படும் போது சொல்லாகிறது. சொல் தொடராகிறது. எனவே சத்தங்களை அட்சரங்களாகப் பிரித்தான். தமிழ் மொழியின் அட்சரங்கள் மிக நுட்பமாக கூறுபடுத்தப்பட்டவை. ஓசை வடிவை வேறு வேறாக்கி இந்த ஓசைக்கு இந்த அட்சரம் என்று பிரித்தார்கள்.
தமிழர்கள் ஓசையை முப்பது அட்சரங்களாகப் பிரித்தார்கள். அவைதான் உயிரெழுத்துக்கள் பனிரெண்டு. மெய்யெழுத்துக்கள் பதினெட்டு. அட்சரத்தினுடைய இலட்சணம் என்பது அதற்கு வடிவம் என்ற ஒன்று இருக்கும். சப்தம் என்ற ஒன்று இருக்கும். அதாவது அட்சரத்திற்கு ஒலி வடிவமும் வரி வடிவமும் இருக்க வேண்டும். இவற்றுள் ஒலி வடிவமே மிக முக்கியம். இதை மாற்ற முடியாது. தமிழிலே இது மாற்றம் பெறாது. ஆனால் உச்சரிப்பிலே மட்டும் வரையறுக்கப்பட்ட மாற்றம் உண்டு. ஒலி வடிவத்தைக் குறிப்பதற்குத்தான் வரி வடிவம் பயன்படுத்தப்பட்டது.
உயிர் எழுத்துக்களின் சப்தத்திற்கு ஒரு அளவு வைத்தனர். மெய்யெழுத்துக்களின் சப்தத்திற்கு ஒரு அளவு வைத்தனர்.
உயிரெழுத்துக்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1. நெட்டெழுத்துக்கள் ( ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஔ)
2. குற்றெழுத்துக்கள் (அ, இ, உ, எ, ஒ)
இந்த எழுத்துக்கள் அனைத்தும் இயற்கையோடு ஒன்றியவை. உயிரெழுத்துக்கள் ஆண் இனத்தைச்சார்ந்தவை. ஆண்கள் இருவகைப்படுவர். மென்மையான ஆண்கள், திண்மையான ஆண்கள்.
நெட்டெழுத்துக்கள் – திண்மையான ஆண்கள்
குற்றெழுத்துக்கள் – மென்மையான ஆண்கள்
மெய்யெழுத்துக்கள் மூன்றாகப் பிரிக்கப்பட்டது.
1. வல்லினம் (கசடதபற)
2. இடையினம் (யரலவழள)
3. மெல்லினம் (ஙஞனநமண)
மெய்யெழுத்துக்கள் பெண் இனத்தைச் சார்ந்தவை. பெண்கள் மூன்று வகைப்படுவர்
வல்லினம் – திண்மையானவர்கள்
இடையினம் – இடைப்பட்டவர்கள்
மெல்லினம் – மென்மையானவர்கள்
கம்ப இராமாயாணத்திலிருந்து இதற்கு உதாரணம் காட்டலாம்.
தாடகை – வல்லினப்பெண்.
அகலிகை – இடையினப்பெண்.
சீதை – மெல்லினப்பெண்.