- உயர்வுச் சிறப்பும்மை
- இழிவுச் சிறப்பும்மை
- இறந்தது தழீஇய எச்ச உம்மை
- முற்றும்மை
உயர்வுச் சிறப்பும்மை;-
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தானநல்கா தாகி விடின்.
இக்குறளில் நெடுங்கடல் என்று கூறாமல் நெடுங்கடலும் என்று அழுத்திக் கூறுகிறார். ம் என்ற எழுத்து கடலின் உயர்வைக் கூறுகிறது. கடல் சாதாரண கடலல்ல. அதிகமான அளவிலே தண்ணீரைக் கொண்டது. திரளான மீனினங்கள், சங்கு, முத்து போன்றவை கடலிலே விளைகிறது. ஆகவே இங்கு உயர்வைச் சொல்ல வந்த படியால் இது உயர்வுச் சிறப்பும்மை.
இழிவுச் சிறப்பும்மை;-
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது.
இக்குறளிலே பசும்புல்லும் தலைகாண்பரிது என்றே இருக்க வேண்டும். திருவள்ளுவர் சுருக்கியதை பரிமேலழகர் உரைக்குறிப்பிலே கூறுகிறார். தாவர இனத்துக்குள்ளே மிகவும் தாழ்ந்ததும் கீழ்மையானதும் புல். இந்தப்புல்லும் மழை இல்லாவிட்டால் முளைக்காது என்கிறார் எனவே இங்கே இழிவைச் சொல்ல வந்தது. இது இழிவுச் சிறப்பும்மை.
இறந்தது தழீஇய எச்ச உம்மை.
விருந்தும் ஆகி அம் மெய்ம்மை அன்பினோடு
இருந்து நோக்கி நொந்து இறைவன் சிந்தியா
பொருந்து நன்மனைக்கு உரிய பூவையை
பிரிந்துளாய் கொலோ நீயும் பின் என்றான்.
இப்பாடல் கம்ப இராமாயாணத்தின் கிட்கிந்தா காண்டத்தில் நட்புகோட்படலத்தில் வரும் பாடல்.
மனைவி சீதையைப் பிரிந்த நிலையில் இராமன் சுக்ரீவன் வீட்டிற்குச் செல்கிறார். அங்கே நடைபெறுகிற விருந்திலே ஆண்கள் உணவு பரிமாறுகின்றனர். ஏனென்றால் சுக்ரீவனும் மனைவியைப்பிரிந்த நிலையில் இருக்கிறார். அதைக்கண்ட இராமன் என்னைப்போலவே நீயும் மனைவியைப் பிரிந்திருக்கிறாயா என்பதற்கு ஒரு ம் தான் சேர்த்துச் சொல்கிறார். இதுவே பொருத்தமான மற்றொன்றைக் கூட்டிக் கொண்டு வருகின்ற ம் என்ற இறந்தது தழீஇய எச்ச உம்மை.
முற்றும்மை;-
ஞாயிற்றுக்கிழமை நமது வீட்டிலே அன்னை விசேடமாக சமைக்கிறார். சோறு, குழம்பு, பொறியல், அவியல், ரசம், பாயாசம் என்று எல்லாம் சமைத்துவிட்டு பாயாசமும் வைத்தாயிற்று என்றே கூறுவார். ஏனென்றால் பாயாசத்திற்கு மேல் ஒன்றும் சமைக்க வேண்டாம். இப்படி இதற்கும் மேல் ஒன்றுமில்லை என்று இறுதியாக கூறுவது முற்றும்மை.
இப்படி நமது வாழ்வில் ம் என்ற எழுத்து பயன்பாட்டில் வருகிறது. படிக்கவும் ஆச்சரியமாக இருக்கிறது.