இறைவன் கட்டளையிட்டுத்தான் மழை பெய்கிறது. இறைவனது ஆணையால் பெய்யப்படுகிற மழையினாலே உலகம் நிலைக்கும். அறம், பொருள், இன்பங்கள் நிலைக்கும். மழை இல்லாவிட்டால் உலகம் நிலைக்காது. ஒவ்வொரு மழைத்துளியும் இறைவனின் கருணைத்துளியாகும். இயற்கையின் அதி உயர் குறியீடு மழையாகும். ஆகவே அந்த மழையைப் போற்ற வேண்டும் என்று கடவுள் வாழ்த்து அதிகாரத்திற்கு பின்பு மழையைப் பற்றிய வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வைக்கிறார். மழையை ஏன் போற்ற வேண்டும் என்பதை ஒவ்வொரு குறளிலும் சொல்லப்போகிறார்.
பாயிரவியல்
வான் சிறப்பு
அதிகாரம் – 2 – குறள் – 11
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
விளக்கம்;-
உலகச் சுழற்சியில் ஏதோ ஒரு இடத்திலே மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. இடைவிடாது பெய்து கொண்டே இருக்கிறது. இக்குறளிலே நிற்ப என்பது நின்று எனத் திரிந்து நிற்கிறது. இப்படி ஒன்று இன்னொன்றாக மாறி நிற்பதற்கு திரிபடைதல் என்று பெயர்.
அமிழ்தம்;-
நமது பாரம்பரியத்திலே சிறப்பானது என்று கூறப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் அழிவு வராது என்றும் நம்பப்படுகிறது. எனவே, இந்த அமிழ்தத்தோடு மழையை ஒப்பிடுகிறார் வள்ளுவர்.எப்படியென்றால், இந்த உலகுக்கு மழை அமிழ்தம். மழை பெய்து கொண்டிருப்பதால் தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது. ஆகவே, உலகிற்கு மழை அமிழ்தம்.
உலகம்;-
மழையால் பயன்பெறுவது உயிர்ப்பொருள்கள் தான் {மனிதன், விலங்குகள், பறவைகள்}. ஆகவே, உலகம் என்ற சொல் இக்குறளிலே உயிர்களைக் குறிக்கிறது. மனிதன், விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடிகள் போன்றவை இறந்து அழிகிறது. ஆனால், மறுபடியும் பிறந்து வாழ்கிறது. இது உலகச் சுழற்சி. இப்படித் தொடர்ச்சியாக நிலைத்தலை நிலைத்தல் என்கிறார் பரிமேலழகர். நிலையின்மையில் ஒரு நிலைத்தல் இருக்கிறது. இப்படி உயிர்களைத் தொடர்ச்சியாக வாழ வைக்கிறபடியால் மழையை அமிழ்தம் என்கிறார் வள்ளுவர்.
இப்படியாக இக்குறளிலே உயிர்கள் உயிர் வாழ்வதற்கு மழை அவசியம் என்று மழையின் அவசியத்தைக் கூறுகிறார்.