வாழ்க்கைத் துணை நலம்

இலக்கியம்

முன்னுரை;-

அறம் இரண்டு கூறாகப் பிரிக்கப்படுகிறது.

இல்லறம் – பற்றுவதும் அறம்.

துறவறம் – பற்றை விடுவதும் அறம்.

இல்லறத்திலே முதிர்ந்தவர்களுக்குத்தான் துறவறம். எனவே முதலில் பயிலப்பட வேண்டியது இல்லறம். பெரும்பான்மையானோருக்கு உரியதும் இல்லறமே. துறவறம் என்பது ஆன்மீகத்தில் முதிர்ச்சியடைந்தவர்களுக்கு உரியது.

இல்லறத்திலே முதிர்ச்சியடைய வேண்டும். அந்த முதிர்ச்சியைத் தருவது திருக்குறளின் இல்லறவியல். திருக்குறள் மனிதனைச் செதுக்க வல்லது. இல்லறத்தானுக்கு பதினோரு கடமைகளை வகுக்கிறார் வள்ளுவர். இந்தக் கடமைகள் அனைத்தையும் அறத்தின் வழியே நின்று செய்ய வேண்டும். அன்பு இல்லறத்தின் பண்பு. அறன் இல்லறத்தின் பயன். இப்படி வாழ்ந்தால் வாழ்க்கை உயரும். துறவை நோக்கிச் செல்கிறவனை விடவும் இல்வாழ்வான் சிறந்தவன்.

மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று கிறித்தவ மறைநூல் கூறுகிறது. எனவே மனிதனால் துணை இல்லாமல் வாழவே முடியாது. எனவே தான் அந்தத் துணைக்குத் திருவள்ளுவர் வாழ்க்கைத் துணை என்று பெயர் வைத்து அந்த வாழ்க்கைத் துணையின் சிறப்புகளை அதிகாரம் முழுவதும் கூறுகிறார். வாழ்க்கைத் துணையின் சிறப்புகளைக் கூறுகிறபடியால் வாழ்க்கைத் துணைநலம் என்று இந்த அதிகாரத்திற்குப் பெயர் வைத்துள்ளார்.

குடும்பத்திற்கு ஆண் தலைவர். இல்லறத்திலே பெண்ணினுடைய அவசியம் என்ன? அவள் எப்படி இருக்க வேண்டும்? என்று கூறுகிறார். ஆண் பலசாலி ஆனாலும் மனைவி உணர்வு சார்ந்து பலம் தருகிறவள். ஆகவே நல்ல மனைவி அமையாமல் இல்லறம் சிறக்க வாய்ப்பில்லை. பெண்களினுடைய பலத்தைச் சொல்லுகிற அதிகாரமாக இந்த அதிகாரத்தை வைக்கிறார். கடந்த அதிகாரம் அறன் வலியுறுத்தலில் ஆணுக்கான கட்டளைகளையும் இந்த அதிகாரத்தில் பெண்ணுக்கான கட்டளைகளையும் வலியுறுத்திக் கூறுகிறார்

அதிகாரம் – 6 – குறள் – 51

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டார்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

விளக்கம்;-

மனைவிக்கான இலட்சணத்தை இக்குறளில் வரையறை செய்கிறார். நல்ல மனைவியினிடத்தில் மனைத்தக்க மாண்பும் வளத்தக்க வாழ்வும் இருக்க வேண்டும்.

மனைத்தக்க மாண்பு;-

இல்லறத்திற்குரிய நற்பண்பு

இல்லறத்திற்குரிய நற்செய்கை

இந்த இவ்விரண்டு குணங்களும் இல்லாதவள் மனைவியல்ல. கணவருடைய வருமானத்துக்குள்ளே வாழ்கிறவளே பெண். இன்றைய உலகமயமாக்கலில் இந்தப்பண்பு காணாமல் போய்விட்டது என்று எண்ணுகிறேன் நான். ஆடம்பரத்திற்காக மற்றவர்களைப் பார்த்து நாம் வாழப் பழகுகிறோம். இது தவறு.

நற்பண்பு;-

(நல்ல) துறவிகளைப் பேணுவது – இதைச் செய்தால் அவர்களுடைய வாழ்த்துதல் கிடைக்கும்.

விருந்தயர்தல் – விருந்தினர்களை முகமலர்ச்சியோடு ஒரு பெண்ணால் மட்டுமே உபசரிக்க முடியும்.

வறியார் மாட்டு அருளுடைமை – தொடர்பில்லாதவர் மேலே வருவது அருள். எனவே அன்பு என்று சொல்லவில்லை. வறியவருக்கு உதவ வேண்டும் என்று கூறுகிறார்.

நற்செய்கை;

பெண்கள் உணர்வு மிக்கவர்கள். அறிவு குறைந்தவர்கள். ஒழுக்கம் அறிவு குறைந்தவரிடமே இருக்கும். விரதம் என்றால் அதில் நிலைப்பாட்டில் இருப்பவர்கள் பெண்கள். இதையே நற்செய்கை என்று கூறுகிறார்.

அட்டில் தொழில் வன்மை;-

நல்ல மனைவியாக இருக்க வேண்டுமென்றால் நன்றாகச் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமையல் செய்யச் செய்யத் தான் பயிற்சி வரும். சமையலால் மட்டுமே கணவரைக் கட்டிப்போட முடியும்.

ஒப்புரவு செய்தல்;-

ஈகை என்பது தனிமனிதனுக்குச் செய்கிற கொடை. ஒப்புரவு என்பது ஊருக்குச் செய்கிற கொடை. உலகத்துக்காக கணவர் செயல்படுவதற்கு உதவி செய்வது ஒப்புரவு. ஊருக்குச் செய்கிற நல்விடயங்களில் பெண்கள் முன்னின்று உழைக்க வேண்டும்.

அழகு கொஞ்ச நாள்களில் பழகிவிடும்.

கல்வி – ஒழுக்கத்துக்கு உதவாத கல்வி கல்வியேயல்ல.

சீதனத்தாலும் பிரயோசனமில்லை.

அந்தக் காலத்திலே ஒரு பெண்ணைத் தீபமேற்றச் சொல்லி அவள் எத்தனைத் தீக்குச்சிகளை செலவழிக்கிறாள் என்று சோதிப்பார்களாம்.

ஒரு சொம்பு தண்ணீர் கொடுத்தால் முகம், கை, கால் கழுவி மீதியும் வைக்க வேண்டுமாம். இவைகளை வைத்தே பெண்களை அளவீடு செய்வார்களாம்.

வெளித்தோற்றம் போய்விடும். குணம் மட்டுமே நிற்கும் அழகும் கல்வியும் இருபது சதவீதம் தான்.

மேற்கண்ட திருக்குறளைப் படித்து வாழ்க்கையாக்கவும் விளைவோமாக.

1 thought on “வாழ்க்கைத் துணை நலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *