முன்னுரை;-
அறம் இரண்டு கூறாகப் பிரிக்கபடுகிறது.
- இல்லறம் – பற்றுவதும் அறம்
- துறவறம் – பற்றை விடுவதும் அறம்
இல்லறத்திலே முதிர்ந்தவர்களுக்குத்தான் துறவறம். எனவே முதலில் பயிலப்பட வேண்டியது இல்லறம். பெரும்பான்மையானோருக்க உரியதும் இல்லறமே. துறவறம் என்பது ஆன்மீகத்தில் முதிர்ச்சியடைந்தவர்களுக்கு உரியது.
இல்லறத்திலே முதிர்ச்சியடைய வேண்டும். அந்த முதிர்ச்சியைத் தருவது திருக்குறளின் இல்லறவியல். திருக்குறள் மனிதனைச் செதுக்க வல்லது. இல்லறத்தானுக்கு பதினோரு கடமைகளை வகுக்கிறார் வள்ளுவர். இந்தக் கடமைகள் அனைத்தையும் அறத்தின் வழியே நின்று செய்ய வேண்டும். அன்பு இல்லறத்தின் பண்பு. அறன் இல்லறத்தின் பயன். இப்படி வாழ்ந்தால் வாழ்க்கை உயரும். துறவை நோக்கிச் செல்கிறவனை விடவும் இல்வாழ்வான் சிறந்தவன்.
மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று கிறத்தவ மறைநூல் கூறுகிறது. எனவே மனிதனால் துணை இல்லாமல் வாழவே முடியாது. எனவே தான் அந்தத் துணைக்குத் திருவள்ளுவர் வாழ்க்கைத் துணை என்று பெயர் வைத்து அந்த வாழ்க்கைத் துணையின் சிறப்புகளை அதிகாரம் முழுவதும் கூறுகிறார். வாழ்க்கைத் துணையின் சிறப்புகளைக் கூறுகிறபடியால் வாழ்க்கைத் துணைநலம் என்று இந்த அதிகாரத்திற்குப் பெயர் வைத்துள்ளார்.
குடும்பத்திற்கு ஆண் தலைவர். இல்லறத்திலே பெண்ணினுடைய அவசியம் என்ன? அவள் எப்படி இருக்க வேண்டும்? என்று கூறுகிறார். ஆண் பலசாலி ஆனாலும் மனைவி உணர்வு சார்ந்து பலம் தருகிறவள். ஆகவே நல்ல மனைவி அமையாமல் இல்லறம் சிறக்க வாய்ப்பில்லை. பெண்களினுடைய பலத்தைச் சொல்லுகிற அதிகாரமாக இந்த அதிகாரத்தை வைக்கிறார். கடந்த அதிகாரம் அறன் வலியுறுத்தலில் ஆணுக்கான கட்டளைகளையும் இந்த அதிகாரத்தில் பெண்ணுக்கான கட்டளைகளையும் வலியுறுத்திக் கூறுகிறார்