பாயிரம்:-
அஃதாவது, இரு வகை விருந்தினரையும் புறந்தருதல். தென் புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் கட்புலனாகாதாரை நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் பிறர்க்கு ஈதல் அன்மையானும், இடை நின்ற விருந்து ஓம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்கட்கு முதல் ஆயிற்று. வேறாகாத அன்புடை இருவர் கூடியல்லது செய்யப்படாமையின், இஃது அன்புடைமையின் பின் வைக்கப்பட்டது.
விருந்து எப்படி முக்கியத்துவம் பெறுகிறது என்று பரிமேலழகர் விளக்குகிறார். இல்லறத்தானுக்கு பதினோரு கடமைகள் உண்டு என்று நாம் முன்னதாகவேப் பார்த்தோம். அதில் வரும் இறுதி ஐந்து கடமைகள் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான். இந்த ஐந்தையும் கைவிரல்களாகப் பார்த்தால் விருந்து நடுவிரலாக வருகிறது. ஆகவே விருந்து அத்தனைச் சிறப்புடையது என்கிறார் பரிமேலழகர். ஏன் என்று பின்வருமாறு பார்க்கலாம்.
முன்னைய இரண்டுமான தென்புலத்தார் (பிதுர்க்காரியம்), தெய்வம் ஆகியோருக்கு நாம் செய்யும் கடமைகள் நம்பிக்கையின் அடிப்படையில் தான் செய்யப்படுகின்றன. இதை நமது கண்களால் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியாது.
பின்னைய இரண்டான ஒக்கல் (உறவுகள்), தான் அதாவது, உறவுகளுக்கும் தனக்கும் செய்வது. இதை நமது கண்களால் பார்க்க முடியும் என்றாலும் அவ்வளவு உயர்ந்த அறமாகாது.
எனவே நடுவிரலாகக் கருதப்படுகிற விருந்து இல்லறத்தான் செய்ய வேண்டிய கடமைகளில் முதல் அறமாகக் கருதப்படுகிறது. தமிழரின் சமயமான சைவம் விருந்தினரைத் தெய்வமாக நினைக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறது.
கணவன், மனைவி இருவரும் கண்மூடித்தனமான அன்புடையவர்களாக இருந்தால் மட்டும் போதாது ஒத்த எண்ணமுடையவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இருவரால் செய்யப்படுவது விருந்து. ஆகவே அதிகாரத் தொடர்பின்படி இது அன்புடைமையின் பின் வைக்கப்பட்டது என்கிறார் பரிமேலழகர்.
தொல்காப்பியம் மற்றும் நன்னூல் கூறும் இலக்கண விதிப்படி வைப்புமுறை என்ற முறையில் வள்ளுவர் மிக அழகாகக் குறள்களை அடுக்கியிருக்கிறார்.
அதிகாரம் – 9 – குறள் – 81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
விளக்கம்:-
இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் – மனைவியோடும் வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம், விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு – விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற்பொருட்டு.
தனிமனித வாழ்க்கை நான்கு நிலைகளாகப் பிரிக்கப்படும்.
- பிரம்மச்சரியம்
- கிருகஸ்தம் (இல்லறம்)
- வானப்பிரஸ்தம்
- சந்நியாசம் (துறவறம்)
இந்த நான்கு நிலைகளைக் குறித்தும் இலவாழ்க்கை அதிகாரத்தின் பாயிரத்தில் இன்னும் விளக்கமாக எழுதியிருக்கிறேன்.
இல்லறம் நடத்துபவர் என்றால் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் சம்பாதிக்க வேண்டும். பொருள் ஈட்ட வேண்டும். அந்தப் பொருளை போற்றி வாழத் தெரிந்திருக்க வேண்டும். இப்படி இல்லறம் நடத்துவது எதற்கு என்றால், மனிதர்களை சமுதாயத்தோடு சங்கிலிப் பிணைப்பாக இணைப்பதற்கு இல்லறத்தான் விருந்து செய்ய வேண்டும். உறவினர்கள், நண்பர்கள், அண்டை அயலகத்தாரோடு விருந்தின் மூலமாக மட்டுமே இணைக்கப்பட முடியும்.
இது உண்மையென்றாலும் விருந்தை மிகப்பெரியச் சிலுவையாகவும் மாற்றிவிடக் கூடாது. எளிமையான முறையில் செய்தாலே போதும். இப்படி விருந்து என்பதை வைத்து உறவுகளுக்குள்ளேயும் நண்பர்களுக்குள்ளேயும் பெரிதான அன்புப் பிணைப்பு உருவாகும். நன்றி மறக்காத குணம் விருந்தின் மூலம் மட்டுமே வரும்.
இல்லறத்திலே எத்தனையோ இன்னல்களை அனுபவிப்பதுண்டு. பொருள் சேர்ப்பதற்கு எத்தனையோ கஷ்டங்கள் படுகிறோம் . ஆனால் உறவினர்களைப் பேணி உபகாரம் செய்யாவிட்டால் இத்தனை இன்னல்களை அனுபவித்தும் பயனில்லை என்கிறார்.
வேளாண்மை – உபகாரம். உபகாரம் செய்கிற தன்மையால் தான் உழவனுக்கு வேளாளன் என்று பெயர் வந்தது.